கு.ப.ரா எனும் மாயோன்

கு.ப.ரா எனும் மாயோன் 1



புராணக் கதைகளில் வரும் மாயோனுக்கு வேறெவரையும் விட பெண்களைப் பற்றி நன்றாகவே தெரியும். அவன் அவர்களுடனே இருக்கிறான் அவர்களாகவே இருக்கிறான். அவர்களின் சிரிப்பையும் அழுகையையும் ஆழமாக உணர்ந்தவன் அவன். அதையே தனது சிருஷ்டியின் ஆதாரமாக கொண்டு ஆண்களுக்குள்ளும் அந்த அபலைப் பெண்களின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை, வலிகளை  உணரும் கடிகார முட்களின் மென்னொலியை  அவர்களுடைய இதயத்திற்குள் கேட்கும்படி செய்கிறான்.  உண்மையில் அவனே அந்தப் பெண்களின் தாகம்,ஏக்கம்,அனைத்துமாக இருக்கிறான். அவனே ஆண்களை மயக்கும் மோகினியாகவும் வலம் வருபவனாகி "தன்னில் தன்னைக் கண்டு தானே மயங்குபவன்". மாயோனின் இத்தனை இரகசியங்களையும் ஒரு சேர இணைத்து மாயோனாகவே புனைவின் தளத்தில் இறங்கி ஒரு சிறுகதை வடிவத்திற்குள்ளாக அதன் அனைத்து நுட்பங்களையும்  ஒருவரால் செய்துக்காட்ட முடியுமென்று நம்புவதற்கு சிரமமாக இருந்தால் இதற்கு முன்பாக நீங்கள் கு.ப.ரா வை முழுமையாக வாசிக்கவில்லை என்றே அர்த்தம். பொதுவாகவே தமிழ் சூழலில் வாசிப்பு மிகக் குறைவு எனும் பொழுது அதில் குறிப்பிட்டு கு.ப.ரா மட்டுமென்ன விதிவிலக்கா! சாபம் சாபம் தான் அதில் சிறிது பெரிது என்பதில்லையே ! அதிலும் மிகத் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஒருவரின் எழுத்துக்களை வாசிப்பதற்கு நமக்கென்று கொஞ்சம் தெம்பும் திராணியும் வேறு வேண்டும்.பொதுவாகவே மிக எளிமையாக ஒரு விஷயத்தை சொல்லி விடும் எழுத்துக்களை (குறிப்பாக பெண்களின் உணர்வுகள் சார்ந்த விஷயங்களை) பெரும்பாலான செவ்வியல் புலிகள் வணிக எழுத்தென்றோ அல்லது பாலியல் எழுத்தென்றோ ஒதுக்கீடு செய்து அதை தனிப் பெருங்காய டப்பாக்களில் அடைத்துவிடுவார்கள். கு.ப.ராவின் எழுத்துக்கள் அவ்வாறு அடைக்கப்பட்டு கிடப்பதாகவே எண்ணவேண்டியிருக்கிறது. உண்மையில் ஜப்பானிய எழுத்தாளர் "யசுனாரி கவாப்பட்டாவின் Palm of the hand stories தொகுப்பிலிருக்கும் கதைகளை விட " பொருண்மை வாய்ந்த கதைகளை எழுதியவர் கு.ப.ரா.   ”ஆமிரபாலி” என்ற சிறுகதை அவருக்கே உரித்தான அழகியலை மிதக்கவிட்டு அதன் வழியே நுட்பமான முறையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை  கதையாக்கி செலுத்தக்கூடியது.இந்தக் கதையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியின்  ஞான சிதறலையும்  காணக்கூடும். இதன் தொடர்ச்சியாக அவர் புத்தரை மையமாக வைத்து எழுதியிருக்கக் கூடிய மகாபோதம் என்ற கதையும் அப்படியானதே.மேட்டிமையுடன் ஒருவர் ஞானவானை  எப்படி அணுகுகிறார் என்பதைத் தாண்டி அதை ஒரு பெண்ணின் மனதிலிருந்து மிகத் துல்லியமாக ஒருவர்  எப்படி எழுதுகிறார் என்பதே ஆச்சரியம் அளிக்கிறது.அந்தக் கதையில் ஸூஜாதை புத்தருக்கு அளிக்கும் பாலன்னம் அதை வெட்டவெளிச்சமாக்கி விடுகிறது. அதை உண்ட புத்தர் ஆத்ம சாந்தி அடைகிறார். அன்பே அவர் கண் முன் நின்றது போல் அமைதி அடைகிறார். ஞானம் துலக்கமாகி  ”அன்பு வெற்றி அளிக்கும், அன்பு பிறப்பின் தோல்வியை அகற்றும்,அன்பு உள்ளம்; அன்பு உயிர். என்று தெளிவு பெற்று தவத்திலிருந்து துள்ளி எழுகிறார்.ஒரு பெண் தன் அன்பினால் புத்தருக்கு ஞானத்தை துலக்கப் படுத்தியதாக கு.ப.ரா எழுதியிருக்கும் இக்கதை தமிழ் சிறுகதைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறவேண்டிய ஒன்று. 

ஆமிராபாலி சிறுகதையில் ஒரு வேசி வீட்டிற்கு புத்தர் பிச்சை வேண்டி வருகிறார் அவர் வருவதற்கு முன்பாக அமராபாலி தன்னையும் தன் வீட்டையும் சுத்தம் செய்து புத்தருக்காக இரவு முழுவதும் உறங்காமல் காத்திருக்கிறாள்.  அவளுக்குத் தெரியும் நிச்சயம் புத்தர் அவள் இருக்குமிடம் தேடி வருவாரென்று. அதே இரவு புத்தருக்கும் உறங்க இயலவில்லை அவர் உடனே புறப்பட்டு ஆமிராபாலியின் வீட்டிற்கு செல்கிறார். அவருக்குத் தெரியும் நிச்சயம் ஆமிராராபாலி அவருக்காக உறங்காமல் காத்திருப்பாளென்று.அப்பொழுது அங்கே இருவரும் சந்தித்துக் கொள்ளும் தருணம் தான் கதையின் உட்சம். அவள் அங்கு நடப்பதை நம்ப இயலாமல் பிதற்றத் துவங்குகிறாள் அப்போது புத்தர் அவள் வீட்டு வாசலில் நின்றபடி அவளிடம் அம்மா "பிச்சையிடு" என்கிறார். இதை விடவா அன்பின் சுடர் மூளும் ஞானத்தை ஒருவர் பக்கம் பக்கமாக எழுதி நிரூபித்துவிட முடியும்? . 

பொதுவாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை மற்றவர்கள் அது அவ்வாறு இல்லையென்று நிரூபிக்கும் விதமாகவோ அல்லது அதிலிருந்து அந்நியப் பட்டவர்களைப் பற்றியோ எழுதிவிடும் போது நமக்கு பதட்டம் உண்டாகிறது. ஒன்று அப்படி எழுதியவர்களின் மீது வசவுகளின் வழியாக சேற்றை வாறி வீச முயற்சிபோம் அல்லது அவர்கள் எழுதி இருப்பதெல்லாம் உண்மையல்ல என்று நிரூபிக்க துடிப்போம். கு.ப.ரா வின் காலத்திலும் அவருக்கு பிந்தைய காலத்திலும் இது நடந்த வண்ணம் இருக்கிறது. அதனால்தான் என்னவோ நாம் நம்முடைய சொந்த புதை குழிகளைத் தோண்டி அதில் எல்லாவற்றையும் புதைக்கத் துவங்குகிறோம். அவ்வாறு புதைக்கப் பெற்றவைகளில் பெரும்பாலனவை வீட்டிற்குள்ளாகவே முடங்கிப் போயிருந்த பெண் இனத்தின் அசலான அபிலாஷைகள். நெடுங்காலமாகவே “அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது” என்று  நம் குரலில் அவளுடையதாக இல்லாத வார்த்தைகளை அவளுடையது என்று வம்படியாக  நாமே சொல்லிக்கொண்டிருந்தவை. ஒரு சிலர் அவர்களுடைய உண்மையான பதிலை தாங்கள் மிக இரகசியமாக கேட்ட விசும்பலை ,காதலை,காமத்தை, கண்ணீரை நேரடியாக சொல்லிவிடுகிறார்கள். கு.ப.ரா அப்படி தான் கேட்டவற்றை பார்த்தவற்றை தனக்கே உரிய முறையில் அழகியலோடு சொல்லிவிடுகிறார். இதில் தி.ஜா வை விட சுருக்கென்று விவரணைகள் ஏதுமற்று ஒரு திண்ணையில் அமர்ந்தபடி அந்த தெருவிலிருக்கும் குடும்பங்களில் வாழும் பெண்களின் கதைகளை மிக நேர்த்தியாக சொல்லும் திறமைப் பெற்றவராக இருக்கிறார்.  கு.ப.ரா, தி.ஜா வின் முன்னோடியாக  இருக்கக் கூடுமென்றே கருதுகிறேன்.பால்ய விவாகங்களும் பால்ய வயதிலேயே விதவை ஆனவர்களும் நிரம்பிய சமூகத்தின் அங்கமாக இருந்து அதன் பாதிப்புகளை சுமந்து  எழுத வந்ததால் கூட அவருடைய கதைகளில் பெரும்பாலானவை  பெண்களுக்கு ஏற்படக்கூடிய குடும்ப மற்றும் உணர்வு சிக்கல்களை மையப் படுத்தியவைகளாக இருக்கலாம். ஆனாலும் இன்றளவும் அதில் ஒரு பொது தன்மை இருக்கவே செய்கிறது என்பதே எதார்த்தம்.


ஆமிராபாலன்


தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்