இருள் மேவிய இறகு





 யாமத்தில்

கனவுகளை துளைத்து  எழுந்த வல்லூறு குஞ்சு ஒன்று

பகலின்  குமிழியில் தள்ளாடி தள்ளாடி

குறுகி சுருண்டு   கிடந்தது


அதன் உடல் 

பிள்ளைப் பேறு பார்த்துவிட்டு பிரசவ அறையிலிருந்து

வெளியே வரும் மருத்துவச்சியின் கைகளை ஒத்திருந்தது 

தற்செயல் நிகழ்வல்ல 


அகாலத்தில் அடிக்கடி விழிக்கும் 

அதன் நகங்களில் 

சதை துணுக்குகள் இன்னும்

ஒட்டியிருக்கின்றன 


இரயில்வண்டி பெட்டிகள்

குகையில் நுழைந்து வெளியேறுவது போல 

அந்த

வல்லூறுவின் திறந்த இடதுகண்ணில்

நுழைந்து வெளியேறும்

எறும்புகளுக்கு

ஒருவேளை

புரியலாம்

இடம்பெயரும்  இருளின் அடர்த்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்