இந்த நிலம் என் கால்களுக்கிடையில் யாரோ விட்டுச்சென்ற
பூப்போட்ட கைக்குட்டையைப்போல தனியாக கிடக்கிறது
ஒரு காலத்தில்
அது மிக அழகான பெண்ணொருத்தியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களில் நனைக்கப்பட்டு
உலர்த்தப்பட்டிருக்கலாம்
அது இன்று கேட்பாரற்று கிடக்கிறது
இது நிலமா ?
கைக்குட்டையா?
அல்லது நானா? என்பதில் உங்களைப் போலவே எனக்கும் குழப்பம்தான்
ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் என்றோ பயன்படுத்திவிட்டு தெரிந்தோ தெரியாமலோ விட்டுச்சென்ற கைக்குட்டைகள் தானே
வயதான கைக்குட்டைகள்
வயதிற்கு வந்த கைக்குட்டைகள்
பால் கொடி மறக்காத கைக்குட்டைகள்
பாலினம் மாறிய கைக்குட்டைகள்
காதலில் திளைத்த கைக்குட்டைகள்
கவிதை எழுதும் கதை எழுதும் கைக்குட்டைகள் ;
இவை
தனியாக திரிந்து தனியாக கிழிந்து அழிந்துப் போவதற்கு பதிலாக
யாரோ ஒருவரின் வீட்டில் இருக்கும் சிறிய அலமாரியின் சிறிய அடுக்கில்
ஒரு மூலையிலாவது மடித்து வைக்கப்பட்டிருந்தால்
நன்றாகத்தான் இருந்திருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக