நிழல்கள்
மிகவும் தாமதமாகிவிட்டது
சாலைகளில் பல்லியைப்போல இரவு
மனிதர்களின் அரவமற்ற வேளையில்
மரங்கள் சல்லாபிக்கத்துவங்கிவிட்டன
கூச்சத்துடன்
நடக்கிறேன்
காற்றில் விரவுகிறது உதிர்ந்த இலைகளின்
நமுத்த ஈர வாசம்
இந்நேரம் வீடுகளில் அடுப்புகளும்
அஞ்சரைப்பெட்டி சாமான்களும் கூட
கிசுகிசுத்து அடங்கியிருக்கும்
இவ்வேளையில் இருட்டுக்கு இடைஞ்சலின்றி
வாலை சுருட்டும் நாயைப்போல
என் நிழலை சுருட்டிக்கொண்டு
உன்னுடன் வர முடிந்தால் நன்றாகத்தானிருக்கும்
ஆனால் நீ எவ்வித தொந்தரவு மில்லாமல்
என்னுடன்
இந்நேரத்தில்
மறக்காமல் ஒரு கைக்குட்டையைப் போல்
கைப்பையைப்போல கொண்டு வரும்
உனக்கு நெருக்கமான வார்த்தைகளை
ஆகாயத்தில் மெல்ல மெல்ல மேலேறி மிதக்கும்
பட்டத்தைப்போல பறக்க விடுகிறாய்
இதோ
கடைசி திருப்பம்
அதற்கு இடது புறம் நீ செல்லும் பாதை
தரையில் சிந்தி ஓடும் தண்ணீராக தனக்கான இடத்தில்
நாளை முதல்
இந்த இடத்தில்
வேறொரு நிலவும்
வேறொரு மனிதனும் தங்களுக்குள் பேசியபடி செல்லக்கூடும்
அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்
இரு நிழல்கள் குறுக்கு வெட்டாக
ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து
ஊடுருவி விலகிச் சென்றதன் அடையாளம்
கருத்துகள்
கருத்துரையிடுக