ஒரு சோளம் அல்லது ஒரு மஞ்சள் நிற
மனிதன்
ஊதாவும் மஞ்சளும் கலந்த அறையில்
மினுமினுத்து அறைந்து மீண்டும் தாவி பறக்கும்
வெளிச்சம் குடிக்கும்
பறவைகள் இன்றைய இரவில் எதையோ தேடி தன் கூர்
அலகை சிலுப்பி சிலுப்பி என் அறையில் அலைந்து திரிந்தன
அன்றிரவில் என்னை அடையாளப்படுத்தும் பச்சை நிற பைஜாமில்
ஆறாவது எண் கொண்ட மனநல
விடுதியின் மூன்றாவது அறையில் தன் காதை எனக்காக அறுத்துக் கொடுக்க மறுத்த காதலியைப்பற்றி வான்காவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவன் மஞ்சள் ஊறிய தன் உடலைத் தொட்டு தொட்டு சுவரில் ஒரு சூரியனை எழுப்பியபடி ஒருவார்த்தைக்கூட பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவன் விரல்களிலிருந்து சாரைப் பாம்பாக
இறங்கி வந்த மஞ்சள் நிறம் என்னைப் போலவே
யாரோ ஒருவர் தன்னோடு இத்தனை
நாட்களாக வைத்திருந்து விட்டுச்சென்ற துணிப்பையாக
தனித்திருந்தது.
அது ஒரு வேளை வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட
மஞ்சள் நிற பூனைக்குட்டியாகயவா
அல்லது வீசி எறியப்பட்ட அவித்த மஞ்சள் நிற சோளமாகவோ இருக்கலாம்.
என்றுமே தனித்திருப்பவர்கள்
மஞ்சள் நிற நோய்கள்
மஞ்சள் நிற
ஞாபகங்கள் சிதைந்த உலகில் தங்கெளுக்கென்று
ஒரு சூரியனை
தங்களுக்கென்று உள்ள வானத்தில்
வ்ரைந்தபடிதான் இருக்கிறார்கள்
விருட்சன்
கருத்துகள்
கருத்துரையிடுக