தீர்க்கதரிசிகள்
கல்லெறிந்து
விரட்டுபவர்கள் நிலத்திலிருந்தே தீர்க்கதரிசிகள் பிறக்கிறார்கள்
தங்கள்மீது
கல்லெறிபவர்களின் மீதும்
முள்கிரீடத்தை
சுமக்க சொல்பவர்கள் மீதும்
ஏன் இத்தனை
நேசமென்று
உங்களைப்போல்
அவர்களும் அறியாமல் இருந்திருக்கலாம்
நேசம்
எதையும் அறியாது என்பதை
தர்க்கரீதியாக
அவர்களுக்கு புரியவைக்க முயன்றவர்கள்தான்
அவர்களுடைய
கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார்கள்
தர்க்கமற்றவர்களும்
நேசத்தின் காரணமாக
முட்டாளாக்கும்
பைத்தியமாக்கும் அனைத்தையும் நம்பியவர்களும் அவர்கள் அறியாமலேயே
தீர்க்கதரிசியாகவே
மாறியிருக்க வாய்ப்பும் இருக்கிறது
நானும்
நீங்களும் நேரத்துடன்
அவரவர்
கையிலிருக்கும் புத்தகத்தில்
அவரவர்
தர்க்கத்தை எடுத்துக்கொண்டு
தீர்க்கதரிசிகளின்
சந்நதிகளுக்கு செல்வோம்
அங்கே
தீர்க்கதரிசிகள் காட்டிக்கொடுக்கப்பட்ட காயங்களுடன் நமக்கு காட்சித்தரலாம்
ஒரு வேளை
அதில் அந்த ஒற்றை தீர்க்கதரிசி
ஒரு கோப்பை
ஒயினை அருந்திய படி
நம்மை
நோக்கியும் ஒரு கோப்பையை நீட்டலாம்
அவர்
அருகில் கல்லெறிந்து விரட்டப்பட்ட
ஒரு வேசியும்
கொத்துக்
குண்டுகளால் கொல்லப்பட்ட
சிரியாவின்
இலங்கையின் குழந்தைகளும் சிரித்தபடி ஓடி ஆடி
விளையாடிக்கொண்டு
இருக்கலாம்
நாம்
இப்பொழுது ஒரு கல்லை எடுப்போம்
நம் நிழலின்
மீது அதை ஒரு அணுகுண்டைப்போல வீசுவோம்
நம்மைப்
பார்த்து புன்னகைக்கும்
அவர்
அருகில் நமக்கான இடம் நிறையவே இருக்கிறது
தயங்காமல்
ஒரு தாத்தாப்பூவைப்போல சென்றமர்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக