கொக்கிப்புழு
நேற்றுதான் அந்த பேருந்தை தவறவிட்டேன்
இன்றும் யாராவது நான் நேற்று சென்ற அதே மது விடுதிக்கு என்னை அழைத்துச்சென்றால் மீண்டும் அதே பேருந்தை அதே நேரத்தில் தவறவிடுவேன்.
உண்மையில் பேருந்தில் சரியான நேரத்தில் ஏறி வீட்டுக்கோ
அறைக்கோ செல்லவிரும்பவில்லை நான்
மிக சரியான படிக்கு எனக்கு மது அருந்த வேண்டும்
மிக சரியான படிக்கு இசை கேட்க வேண்டும்
மிக சரியான படிக்கு கவிதை வாசிக்க வேண்டும்
நிகழ்காலத்தில்
எனக்காக காத்திருக்கும் ஒரு காதலியும்
என்னால் இன்னொருத்திக்கு பிறந்த ஒரு குழந்தையும் உண்டு
அவர்களுக்காக
நான் இந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும்
நண்பர்களே
இப்பனிக்காலத்தில் ஐந்தாவது கோப்பை மதுவை அருந்தும் என் உடல்மீது
வெகு காலமாய் பிசுபிசுக்கும்
என் துரதிஷ்ட ஆடைகளை
யாராவது வாங்கிக்
கொண்டால் நல்லது
இத்தனைக்கும்
வீடு திரும்ப விரும்பாத எனக்கு என்
குழந்தைக்கும் காதலிக்கும் சொல்வதற்கு சுவாரசியமாக
சில கதைகள் இருப்பதும் உண்மை எனவே
இன்று ஒருநாள் என்னை யாராவது உங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று யாருமறியாத
மூன்றாவது திருப்பத்தில் இட்லி சுட்டு விற்கும் கிழவி ஒருத்தியின் வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு விட்டு திரும்பி பார்க்காமல் சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக