கதை 2



மஞ்சள் குருவிகள் (CANARIES)
(யசுனாரி கவாபட்டா)

நான் செய்துகொண்ட சத்தியத்திற்கு புறம்பாக மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்.

போன வருடம் உங்களிடமிருந்து பெற்ற மஞ்சள் குருவிகளை இனி நான் நீண்ட காலத்திற்கு என்னுடன் வைத்திருக்க முடியாது. எப்பொழுதுமே என் மனைவிதான் அவற்றைக் கவனித்து கொண்டிருந்தாள். என்னுடைய வேலையானது அவற்றை வெறுமனே பார்ப்பதும் அவற்றைப் பார்க்கும் போது உங்களைப் பற்றி நினைப்பதும் மட்டும்தான்.

நீங்கள் தானே சொன்னீர்கள் எனக்கென்று ஒரு கணவன் இருக்கிறான் உங்களுக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள் இனி நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை நிறுத்தியாக வேண்டுமென்று. உங்களுக்கு மனைவி இல்லாமல் இருந்தால் மட்டுமே நாம் இனி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியும் என்று. .எனவே நான் என் நினைவாக உங்களுக்கு இந்த மஞ்சள் குருவிகளைத் தருகிறேன் என் ஞாபகம் வரும் போதெல்லாம் அவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் .

இப்பொழுது இந்த மஞ்சள் குருவிகள் இரண்டும் சோடிகளாகிவிட்டன. ஆனால் வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைக்காரன் அவற்றைத் தரும் போது ஆண் குருவியில் ஒன்றும் பெண் குருவியில் ஒன்றும் என்று அவன் மனம் போன போக்கில்  தேர்வு செய்து அவற்றை சாதாரணமாக கூண்டில் அடைத்து கொடுத்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில்  இந்தக் குருவிகள் எதுவும்  செய்வதற்கில்லை.எப்படியோ,  தயவுசெய்து நீங்கள்  இந்த பறவைகளுடன் சேர்த்து என்னையும் ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள். ஓர் உயிருள்ள பறவையை ஞாபக மூட்டும் ஒரு பொருளாக கொடுப்பது வினோதமான ஒன்றாக இருக்கலாம் ஆனால் நம்முடைய நினைவுகளும் கூட உயிர்ப்போடு  வாழ்ந்துக்கொண்டிருப்பவை தானே.ஒரு நாள் இந்த மஞ்சள் குருவிகள் இறந்துவிடும் அவற்றோடு சேர்த்து நம் இருவருக்கிடையேயான ஞாபகங்களும் நிச்சயம் மறையத்தான் வேண்டும் . அவற்றை மறைந்துபோக விடுவோம்.

இப்பொழுது அந்த மஞ்சள் குருவிகள் மரணிக்கும் தருவாயில் இருக்கின்றன. அவற்றை யார் பராமரித்து வந்தாளோ அவளும் இறந்து விட்டாள். ஒதுக்கப்பட்ட ,ஏழை ஓவியனான என்னால் மிக நலிந்த நிலையில் இருக்கும் இந்தப் பறவைகளை பராமரிக்க முடியாது. நான் நேரடியாக அதைச் சொல்லிவிடுகிறேன். 
என் மனைவிதான் வழக்கமாக அவற்றை பராமரிப்பவள் , அவள்   இப்பொழுது இறந்துவிட்டாள். என் மனைவி இறந்து போனதிலிருந்து நான்  இந்தப் பறவைகளும் இறந்து போகுமோ என்று திகைப்படைந்திருந்தேன்.  மேடம் , உங்கள் ஞாபகங்களை என் மனைவிதானே என்னிடம் கொண்டுவந்தவள் ?அதனால்தான் இதைச் சொல்கிறேன் ,

நான் இப்பொழுது அந்த மஞ்சள் பறவைகளை கூண்டிலிருந்து விடுவிக்க நினைக்கிறேன், ஆனால் என் மனைவி இறந்ததிலிருந்து அந்தப் பறவைகளின் இறகுகள் சட்டென்று வலுவற்றுப் போனவைப் போல் தோன்றுகின்றன. மேலும் அந்தப் பறவைகளுக்கு ஆகாயமென்றால் இதுவரை என்னவென்று தெரியாது. இந்த சோடிகளுக்கு கூட்டமாக சேர்ந்து பறப்பதற்கு நகரத்திலோ அல்லது அருகிலுள்ள காட்டிலோ தெரிந்த துணையென்று ஒருவருமில்லை.அந்தப் பறவைகளில் எதுவோ ஒன்று மற்றொன்றை விட்டு தனித்து பறந்து போகுமென்றால் அவை இரண்டும் தனித்தனியாக சென்று இறந்துவிடவும்  கூடும்.. ஆனால் அதன் பிறகு   வளர்ப்பு பிராணிகள் விற்கும் அந்தக் கடைக்காரன் அவன் மனம் போன போக்கில் ஓர் ஆண் பறவை, ஒரு பெண் பறவையென்று  தேர்வு செய்து சாதாரணமாக கூண்டில் அடைத்துக் கொடுத்தான் என்று நீங்கள்  சொல்லி இருந்ததை இப்போது நீங்கள்  மாற்றிக் கொள்ளக் கூடும்.
அதைப் பற்றி நேரடியாக பேச வேண்டும் என்றால் நான் அவைகளை பறவைகள் வாங்கி விற்கும் வணிகனிடம் விற்க விரும்பவில்லை ஏனெனில் அந்தப் பறவைகள்  நீங்கள் எனக்கு கொடுத்தவை.என் மனைவிதான் அவற்றை கவனித்து வந்த ஒருத்தியாக இருந்தாள் என்றாலும் கூட
அவற்றை உங்களிடம் திருப்பிக் கொடுக்கவும் நான் விரும்பவில்லை. அதற்கும் மேலாக(நீங்கள் ஒரு வேளை ஏற்கனவே இதை மறந்திருக்கலாம்) அந்தப் பறவைகள் உங்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக அமையக்கூடும்.

நான் மீண்டும் சொல்கிறேன். என் மனைவி இங்கே இருந்ததால் தான் அந்தப் பறவைகள் இதுவரை இங்கே உயிருடன் இருக்கின்றன (உங்கள் நினைவுகளை பரிமாறிக் கொண்டு ) அதனால்தான் மேடம் , அவள் மரணத்திற்கு பிறகும் அந்தப் பறவைகளை நான் என்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.என் மனைவி செய்த காரியம் உங்களைப் பற்றிய ஞாபகங்களை என்னுள் உயிர்ப்போடு வைத்தது மட்டுமே அல்ல. உங்களைப் போன்ற ஒரு பெண்ணை எப்படி என்னால் நேசிக்க முடிந்தது? ஏனெனில் என் மனைவி என்னுடன் இருந்தாள் அதனால் தான் இல்லையா? அவள் என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனைத்து வலிகளையும் மறக்கடித்தாள்.அவள் என் வாழ்வின் இன்னொரு பகுதியை பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் அப்படி செய்திருக்கவில்லை என்றால் , நான் என் பார்வையை வேறொரு பக்கமாக திருப்பிக் கொண்டிருப்பேன் அல்லது உங்களைப் போன்ற ஒரு பென்ணிற்கு முன்பாக என் பார்வையை துயரத்தில் தாழ்த்திக்கொண்டிருப்பேன்.

மேடம், நான் ஒரு வேளை அந்தப் பறவைகளைக் கொன்று அவற்றை என் மனைவியின் கல்லறையில் புதைப்பேன் என்றால் அது எல்லாம் சரி,  இல்லையா? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்