கோப்பையில் வழியும் இரத்தம் 



புத்தரை பின்பற்றாத ஒருவன்

மிக மெதுவாக அழத் தெரிந்தவன்

மிக அழகாக சிரிப்பவனாகவும்

இருக்கிறான்

அவன் யாருடனும் பேச விரும்பாதவன்

வெறுமனே அவன் அருகில் அமர்ந்து எழுந்து போனால் போதும் அவனுக்கு.

 

அவனை பெரும்பாலும்

நீங்கள்

தனியாகவே பார்க்க முடியும்

அவன் தனியாகத்தான் வளர்ந்தான்

தலைப்பிரட்டை தவளையானதைப் போல.

 

அவன் மிக அழகாகச் சிரிப்பவன்

தனிமையிலும் கூட.

 

அவனுக்கென்று

யாரிடமும்

எதுவும் இல்லை

ஆனாலும்

அவன் தன்னோடு இணையும் எல்லா உடலிலும்

எதையோ ஒன்றை தேடுவதைப் போலவே

பாசாங்கு செய்கிறான் .

 

அவன் தன்னையே காகிதங்களில்

கப்பல்

பறவை

கத்தி

பூ

என்று எல்லாமுமாக மாற்றி செய்யக் கூடியவன்

தானும் ஒரு காலத்தில்

அந்தக் காகிதங்களில்

இருந்த மரங்கள் என்று  நினைத்து

மகிழ்ந்து போவான்.

 

நேற்று

அவன் அம்மாவின் சவக்குழியை

அவனே தான் தோண்டினான்

அப்பாவிற்காகவும்

ஒன்றை தோண்டி வைத்திருக்கிறான்

அவருக்கு ஜீவ சமாதி அடைவதில்

விருப்பமா என்று கேட்க

விருப்பமில்லாமல்

காத்திருப்பதே

அனைத்திற்கும் விடையென்று

யாரோ சொன்ன வார்த்தையை கடைப்பிடித்து

இன்றுவரை அவர் கட்டிலருகே காத்திருப்பவன் அவன்.

 

அவன் சிரிப்பு மிக அழகாக இருக்கும்

தனிமையில் கூட.

 

அவன் அறையில்

புத்தகங்களும்

சில பூச்சிகளும்

சுதந்திரமாக இருக்கின்றன

அவற்றிற்கு இடையில்

அவன் சிறுவனாக இருந்த போது எப்போதாவதுதான்

அதே சுதந்திரத்தோடு இருந்திருக்கிறான்

அவனிடம் 

 அப்பா பயன்படுத்திய பிரம்பும்

அம்மா தற்கொலைக்கு பயன்படுத்திய தாத்தாவின் வேட்டியும்

இன்றும் இருக்கிறது .

 

அவன் சிரிப்பு மிக அழகாக இருக்கும்

தனிமையில் கூட.

 

அவனுக்கு

இரண்டு குழந்தைகள் உண்டு

ஒரு சில சமயங்களில் ஒரு சிலர் மனைவிகளாகவும்

இருந்திருக்கிறார்கள்

 

அவன் ஒரு எளிய கொலையாளி

அவன் ஒரு எளிய பிச்சைக்காரன்

அவன் ஒரு எளிய கவிஞன்

அவன் ஒரு எளிய காதலன்

அவன் பிணங்களை உண்பவன் என்று

சொல்வதை அவனே இரசிப்பான்

அவன் மனநோயாளி

என்று சான்றளிக்கப்பட்டு

தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தவன்

அவனுக்கு குழந்தைகளைப் பிடிக்கும்

அவனுக்கு இசை பிடிக்கும்

அவனுக்கு திரைப்படங்கள் பிடிக்கும்

அவனை பிடிக்காதவர்களையும் பிடிக்கும்

அவன் எந்தப் பூச்சியையும் இதுவரைக் கொன்றதில்லை

ஆனாலும் அவன் கொலைக்காரன்

அவன் அப்பா 

அவனை அப்படித்தான் அழைப்பார்

 

அவன் சிரிப்பு மிக அழகாக இருக்கும்

தனிமையில் கூட.

 

அவன் தான் காணாமல் போவதையே விரும்புகிறான்

தன்னை யாராவது கொலை செய்தால்

இன்னும் நன்றாக இருக்கும் என்பதை நினைத்து

பல முறை  இரசித்திருக்கிறான்

இன்று

அவன் தன் அறை சன்னல் வழியாக

தெருவைப் பார்த்தபடி

அமர்ந்திருக்கிறான்

கொய்யப்பட்ட கண்களில்லாத

தன் தலையோடு



2. பசியற்ற கொக்கு

 குளக்கரை நோக்கி

 விரைகிறது

 வெறுமனே மீன்களை பயமுறுத்த

 தன் அலகை

 குளத்து நீரில் கூர்தீட்ட

 

3. எல்லாவற்றையும்

 எளிதாக்கி கொண்டதைப் போலவே

 நடிக்கும்

 உனக்கும்

 எனக்கும் மட்டுமே தெரியும்

 நாம் எத்தனை சிக்கலானவர்களென்று

 

4 .யாரோ ஒருவராக வாழ முடிந்தவன்

 தனது பழைய நம்பிக்கைகளை

 மூடி வைத்திருந்த புத்தகத்தின் ஏடுகளை

 ஒவ்வொன்றாக கிழிக்கிறான்

 பின் அதில்

 அந்த நம்பிக்கைகளை

 தனக்கு தந்தவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக எழுதி

 அதை அழகாக மடித்து படகாக்கி

 கானல் விரவிய

 கோடையின் நீண்ட நதியில் மிதக்கவிடுகிறான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்