சிறுகதை
அப்பா வாங்கி தந்த சைக்கிள்
முத்து வரும் வரை என்னால் அந்த இடத்தில் காத்திருக்க முடியவில்லை. ஆனால் சைக்கிள் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா அத்தனை லேசில் வீட்டிற்குள் விடமாட்டார் .அவன் வரும் வரை அங்கே காத்திருப்பதை
தவிர வேறு வழியில்லை. முத்து சைக்கிளை எடுத்துக்கொண்டு எப்படியும் சித்ராவைப் பார்க்கத்தான் போயிருப்பான். ஆனால் அவனிடம் அதைப் பற்றி கேட்க என்ன இருக்கிறது. சித்ராவும் முத்துவும் பழகியது தெருவுக்கே தெரியும். ஆனாலும் அவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் நடக்கவில்லை. எப்படி நடக்கும்? முத்து சித்ரா அம்மாவை சித்தி என்று அழைப்பது எல்லாருக்குமே தெரியுமே.
சித்ராவை அவன் காதலித்தான் என்பது எங்களில் பல பேருக்கும் அருவருப்பூட்டுவதாகதான் இருந்தது ஆனாலும் அவனிடம் அதை நேரடியாக யாரும் சொன்னதில்லை. அப்படி சொன்னாலும் முத்து அதைக் காது கொடுத்து கேட்க மாட்டான் என்பதும் எங்கள் எல்லாருக்குமே தெரியும்.ஆனால் அவனாக பல முறை என்னிடம் சொல்லி அழுதிருக்கிறான். "மாப்ள எனக்கு எதுவும் தெரியாதுடா " அவ நம்ம தெருவுக்கு குடிவரும் போது நான் தான்டா முதல்ல அவள ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போனேன் "அப்போதிருந்தே அவள எனக்கு பிடிக்கும் டா. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தான் என் அப்பாவுக்கு அவ அப்பா சொந்தம்னு என் அம்மா சொல்லித் தெரியும். ஆனால் என்னால அதெல்லாம் ஒரு பொருட்டா எடுக்க முடியலை டா " என்னா பண்றது ! என்று. ஆனால் முத்துவோ சித்ராவோ வீட்டில் தெருவில் நடக்கும் பேச்சுக்களுக்கு பெரிய அளவில் காது கொடுத்து கவலைப்படாமல் அவர்களுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தார்கள். சைக்கிளில் போன முத்து மீது பைக்காரன் வண்டிய மோதிட்டான் என்று சொல்லி தெருவில் இருந்தவர்களெல்லாம் வளைவு முக்கை நோக்கி ஓடும் வரை நான் அவர்களுடைய காதலைப் பற்றியே யோசித்தவாரு நானும் முத்துவும் சந்தித்துப் பேசும் தெரு முனையில் இருக்கும் மாரியம்மன் கோவிலிலேயே உட்கார்ந்திருந்தேன். வேகவேகமாக ஓடிப் போய் பார்த்த போது முதலில் தெரிந்தது சைக்கிளின் முன் வீல் கோணல் மானலாகி கிடந்த காட்சிதான். நல்ல வேளையாக முத்துவிற்கு பெரிய அடி ஒன்றும் இல்லை. அங்கங்கே சில சிராய்ப்புகள் மட்டுமே. அங்கே அவன் எதற்காக தெருவைச் சுற்றிக்கொண்டு மற்றொரு தெரு வழியாக நுழைந்து ரோட்டிற்கு குறுக்காக வந்தான் என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். சித்ரா தையல் சொல்லிக் கொடுக்க கிளாஸிற்கு போகும் நேரத்தில் அவளை எப்படியாவது அழைத்துச் சென்றுவிடலாம் என்ற திட்டத்தோடு அவன் சென்றது அவனாக சொல்லும் வரை எனக்கும் அவன் ஏன் இந்த வழியாக வந்தானென்று குழப்பமாகத் தான் இருந்தது. அதன் பிறகும் அவன் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.அவளுடன் இன்னும் நெருக்கமாகவே ஆகிக்கொண்டிருந்தான். உடல் அளவிலும் அந்த நெருக்கம் அதிகமாகி சித்ராவிற்கு யாருமறியாமல் அவள் அம்மா மருத்துவமனை அழைத்துச் சென்று கருச்சிதைவு செய்து அழைத்து வந்திருப்பதாக தெரு முழுக்க பேசிக் கொண்டார்கள். முத்துவிடம் இதைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் சித்ரா அதன் பிறகு பார்ப்பதற்கு மிக பரிதாபமாக ஒடிந்து தேய்ந்து போய்தான் இருந்தாள். கண்ணம் இரண்டும் ஒட்டிப் போய் அடையாளம் தெரியாதபடி ஆகிவிட்டாள். அவளை வெளியே எங்கும் செல்ல அனுமதிக்க வில்லை . இத்தனை நடந்தும் இருவர் வீட்டிற்கு இடையில் ஒரு சின்ன வாய்ச் சண்டை கூட வந்ததில்லை. ஆனால் சித்ரா அம்மா கூடத்தில் அமர்ந்தபடி தன் மகளை கட்டி அணைத்துக் கொண்டு அழுததாக என் அம்மா சொல்லி எனக்குத் தெரியும். முத்து சித்ராவுடன் வாழ்வதற்காக எத்தனையோ திட்டங்கள் வைத்திருந்தான்.என்னிடம் "மாப்ள நான் வெளிநாடு போகப்போறன் " அவளையும் அழைச்சிட்டு . அங்க ஒரு பயலும் எதுவும் பேச முடியாதுல. இந்த நாட்டு பக்கமே வரமாட்டன் . நான் ட்ரைவர் அவ டைலர் ரெண்டு பேருகிட்டயும் தொழில் இருக்கு . நாங்க எவன் கால்லயும் விழ வேணாம். எங்கள வாழ விட்டா போதும் டா " என்று அடிக்கடி சொல்வான்.ஆனால் கொஞ்ச காலத்திலேயே எல்லாம் மாறத்துவங்கியது. முத்துவிற்கு கல்யாணம் நடந்தது அவன் தனியாக வெளிநாடு போனான். நிறைய சம்பாத்தித்தான் அவன் வருவதற்குள்ளாகவே சித்ராவிற்கும் கல்யாணத்தை முடித்து விட்டார்கள். நான் இருவரின் கல்யாணத்திற்கும் போயிருந்தேன்.இன்று என்னைத் தவிர அவர்கள் இருவருக்கும் இதைப் பற்றி ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. அப்பா அதன் பிறகு எனக்கு சைக்கிளே வாங்கித் தரவில்லை. அந்த சைக்கிளை அன்றே வந்த விலைக்கு விற்றுவிட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக