சிறுகதை

டோன்ட் டச் 

(விருட்சன்)

வேலு சோடா கம்பெனியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான். இப்போதும் அங்கே சோடா குடிக்க,அதனோடு ஒட்டியிருந்த சிறிய கடையில் சில்லறை சாமான்கள் வாங்க ஆட்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கடையின் வாசலைப் பார்த்தபோதே தெரிந்தது.அவனுடைய வீடு அந்த சோடா கம்பெனியை ஒட்டிய காலணியில் தான் இருந்தது. அனைவருக்கும் பொதுவான கழிவறை உள்ள காலணி அது. அவரவர் வீட்டிற்கு முன்பாக ஒரு சாக்கடை குழியும் இருக்கும். குளிக்க போவதற்கு முன்னால் அந்த குழியிலிருந்து தண்ணீரை மொண்டு ரோட்டில் ஊற்ற வேண்டும். ரோட்டில் போகும் நபர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போலத்தான் விலகிப் போயாக வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் சாக்கடை வசதியோ கழிவறை வசதியோ அத்தனை முக்கியமான ஒன்றென்று அங்கே யாரும் கருதவில்லை. எல்லா நாத்தங்களையும் சகஜமாக எடுத்துக் கொண்டு உண்டு உறங்கி புணர்ந்து இறந்தும் போய்க் கொண்டிருந்த காலமது. ஆனால் வேலு வீட்டிற்கு வடக்கே இருக்கும் செட்டியார் மட்டும் சாக்கடைத் தண்ணீர் வேலு வீட்டு குழியிலிருந்து தன் வீட்டுக் குழியில் வழிவதை அத்தனை லேசில் விட்டுவிட மாட்டார். அப்படி வழிவதை பார்த்து விட்டால் பு னா சு னா அர்ச்சனை தான்.அதற்காகவே ஒவ்வொரு முறையும் வேலு தன் வீட்டு ஆட்கள் குளிக்கும் போது வாளியும் துண்டுமாக வாசலில் நிற்பான். மொழு மொழு வென்று இருக்கும் அவன் உடலை மாடியிலிருந்து சோடாக்கம்பெனி கம் காலணியின் ஓனரான பிள்ளைபெருமாள் நாக்கில் எச்சில் ஊற பார்த்துக் கொண்டிருப்பார். ஆண் -பெண் உறவையே அசால்ட்டாக எடுத்துக் கொண்டு வாழும் இடமது என்றாலும் இப்படியெல்லாம் ஒரு இனச்சேர்க்கை இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்காத வயது வேலுவிற்கு. இன்று அவன் நடந்து செல்லும் போதும் நரகம்தான் என்றாலும் அந்த காலணி இருந்த இடத்தைப் பார்க்க மனம் ஏங்கத் தான் செய்தது. வேலு எப்போது கடைக்கு சென்றாலும் பிள்ளைபெருமாள் அவனுக்கு கல்லை மிட்டாயோ அல்லது தேன் மிட்டாயோ கொடுத்து ஆசையாக அவன் கண்னத்தையும் உடலையும் ஒரு முறை தடவிப் பார்த்து தான் அனுப்புவார். எங்கு தொட அனுமதிப்பது எங்கு தொட அனுமதிக்கக்கூடாது   என்பதையெல்லாம் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த அளவிற்கு  அவனுக்கு வீட்டிலோ பள்ளிக்கூடத்திலோ யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் கடைக்கு போகும் போது பயத்தில் நடுங்குவான். அவர் ஏன் தன்னை இந்த தடவு தடவகிறார். அப்படி நம் உடலில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவர் அருகில் வந்தாலே பயத்தில் கை கால்கள் உதற ஆரம்பிக்கும். பிள்ளை பெருமாள் அப்படி ஒன்றும் எடுத்த எடுப்பிலேயே தன் வேலையை ஆரம்பித்து விடக்கூடியவர் இல்லை. முதலில் கையைப் பிடித்து சோடாக் கம்பெனிக்குள் அழைத்துச் சென்று அங்கிருக்கும் எந்திரத்தை காண்பிப்பார் பிறகு குடிப்பதற்கு கலர் கொடுப்பார் அதன் பிறகு மெல்ல தன்னில் ஊறி திமிரும் மிருகத்திற்கு தீனியாக தன் எதிரே இருக்கும் சின்னஞ்சிறு உடலை எடுத்துக்கொண்டு விழுங்கத் துவங்குவார். வேலுவிற்கு தினம் நடக்கும் இதை வீட்டில்  எப்படி சொல்வது என்று விளங்கவில்லை. அப்படியே சொன்னாலும் அப்பா நிச்சயம் தன்னை நம்பமாட்டார். இதைச் சொன்னதற்காக திருப்பி அவனுக்குத்தான் அடி விழும். அம்மாவிற்கு வேலைக்கு போகத்தான் நேரமிருக்கும். அம்மாவிடம் பிள்ளை பெருமாள் தன்னிடம் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று சொன்னால் கடைக்கு போகாமல் இருப்பதற்காக சாக்கு போக்கு சொல்லி ஒரு பெரிய மனுஷனை அதுவும் இந்தக் காலணி குடியிருப்பை உருவாக்கி பெரிய மனதோடு நாம் குடியிருப்பதற்கு   வாடகைக்கு வீடு கொடுத்திருக்கும்  அவரை அசிங்கப் படுத்த நினைக்கிறாயா ? நாயே ,பேயே என்று கத்த துவங்கி விடுவாள். அதனால் அவன் நடப்பதை இருவரிடமும் சொல்ல தைரியம் வரவில்லை. உட்சகட்டமாக ஒரு நாள்   அவர் வாய் வழிப் புணர்ச்சி செய்யச் சொல்லி அவனை கட்டாயப்படுத்தி போது தான் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சோடாக் கம்பெனியிலிருந்து ஓடி வந்தான். அடுத்த நொடியே அவர் அவன் பின்னாலேயே வீட்டிற்கு வந்து அவன் அம்மாவிடம் "என்ன புள்ள வளத்து வச்சுருக்க " இந்த வயசுலேயே திருட்டு வேலை " சோடாக் கம்பெனியில பூந்து கலர் பாட்டில் திருடுறான் " என்றார். வேலுவின் அம்மாவால் நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. வேலு அவ்வபோது வீட்டிலிருக்கும் அய்ம்பது காசு ,ஒரு ரூபாய்  என்று திருடி அவன் அம்மாவிடம் அப்பாவிடம் மாட்டியிருக்கிறான். அதனால் அவன் இது மாதிரி செய்திருப்பானோ என்றுதான் அவளும் நினைத்தாள். பிள்ளை பெருமாளிடம் ”அய்யா இந்த ஒரு முறை மன்னிச்சி விட்டுடுங்க இனி அப்படி நடந்துக்காம பாத்துக்குறங்க” என்று கெஞ்சினாள். அடுத்த நொடி வேலுவின் தலை மயிரைப் பிடித்து இழுத்து முகத்திலும் முதுகிலுமாக பளார் பளாரென்று தன் வெறியும் அவமானமும் அடங்கும் வரை  அறைந்தாள். பிள்ளை பெருமாள் அதைப் பார்த்து  பதட்டம் அடங்கியவறாக அவன் கிட்ட ஏன்டா இப்படி செஞ்சன்னு கேட்கறதுக்கு "இரு என் அம்மாட்டப் போய் ”நீ அசிங்கமா இப்படி செஞ்ச அப்படி செஞ்சனு சொல்லி உன்ன அவமானப் படுத்துறன்யானு” மெரட்டுறான் "என்று கூறி  தன் பெரிய மனுஷன் பட்டம் ஆபத்துக்கு உள்ளாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த  திருப்தியில் அங்கிருந்து நகர்ந்தார். அதன் பிறகு வேலுவை அவன் அம்மாவும் அப்பாவும் அவனுடைய பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.கடைசிவரை அவர்களுக்கு பிள்ளை பெருமாள் எப்படி பட்டவர் என்று தெரியவே இல்லை.அவர் தனக்கு அந்த காலணியில் குடியிருந்தவர்கள் ,ஊர்காரர்கள் அளித்த புண்ணியவான் பட்டத்துடனே போய் சேர்ந்தார்.அதன் பிறகு  வேலு தன்னுடைய  பாட்டி வீட்டிலிருந்தே பண்ணிரென்டாம் வகுப்புவரை படித்து முடித்தான்.கல்லூரி படிப்பிற்காக திருச்சி சென்றான்.  ஆனால் அவன் உடலிலும் மனதிலும் அந்த நடுக்கம் வெகு இன்றும் பேருந்திலோ அல்லது எதாவது கூட்டமான இடத்திலோ யார் உரசி நின்றாலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. அவனால் பிள்ளைப் பெருமாள் தனக்கு முன்பாக நிர்வாண கோலத்தில் நின்றதை மறக்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து அதே சோடா கம்பெனியை பார்ப்பதற்காக வேலு தன் இளைய மகளுடன் அங்கே வந்திருந்தான். பிள்ளைப் பெருமாளின் மருமகன் தான் அந்தக் கடையை இப்போது கவனித்து வருகிறார் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள். அவனை அங்கே யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. நாலாவது படிக்கும் போது நடந்தது நாற்பது வயதிலும் அப்படியே அவன் நினைவில் தங்கிப் போய்விட்டது. பிள்ளை பெருமாள் மீது இப்போது அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. அந்த கடைக்குச் சென்று ஒரு கலர் வாங்கிக் குடிக்க வேண்டும் போலிருந்தது. நெருங்கிப் போனான் பிறகு என்ன நினைத்தானோ அவன் மகளை கூட்டிக் கொண்டு திரும்பி வந்துவிட்டான். வரும்போதே அவன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே வந்தான் "உன்னை யாராவது தப்பான இடத்துலே தொட்டா " என்னா சொல்லனும் அவனுடைய மூன்றரை வயது மகள் சொன்னாள் "don't touch" என்று.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்