பிசாசுகளின் காலம்
நோய்மையின் இரவுகள் வீதி தோறும் இரைக்கின்றன கடும் சாக்காட்டின் கசப்பேறிய வாசனையை
படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை
மனைவிகள், குழந்தைகள், அம்மாக்கள்,அப்பாக்கள், சகோதரர்கள், சகோதரிகள் கடைசியாக ஒரு முறை நிம்மதியாக மூச்சு விட முடியாமல் கண்கள் அகல விரிந்திருக்க முறையிட்டபடியே மரணிக்கிறார்கள்
எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் மட்டுமே இருக்கிறார். எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது
எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரின் குரல் மட்டுமே கேட்கிறது
எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றே கட்டளையிடப் பட்டிருக்கிறது.
இந்த நாட்களின் கருமையை எதைப் பூசி அழிப்பது?
இந்த நாட்களின் பசியை எதைத் தின்று ஆற்றுவது ?
இந்த நாட்களின் அவமானங்களை எதைக் கொண்டு துடைப்பது ?
இந்த நாட்களில் மரணித்தவர்களை எப்படி உயிர்ப்பிப்பது?
நதிக்கரைகள் நாகரீகமற்று பிணங்களை தின்று மலடாகின்றன
பொய்களை கேட்டு சலித்துப் போன பிணங்கள் மிதிவண்டியிலிருந்து ஆம்புலேன்ஸிலிருந்து தள்ளு வண்டியிலிருந்து பொத்தென்று விழுகின்றன
ஆரவாரத்தோடு அறிவித்தவை எல்லாம் கிருமிகளை அழிப்பதற்கு பதிலாக மனிதர்களை அழிக்கின்றன
கடந்து போகும் இரவுகள் கொல்லிவாய் பிசாசுகளாக கையில் மணி ஏந்தி ஒலிக்கின்றன
கருத்துகள்
கருத்துரையிடுக