அணுக்களும் மூலக்கூறுகளும்

 




அசோக் சார் என்றால் சிலருக்கு பயம் சிலருக்கு சிரிப்பு . அவரைப் பற்றி பள்ளிக் கூடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொள்வார்கள். ஆனால் உண்மையாகவே அவரை நெருங்கி பார்த்தவர்களுக்கு தான் தெரியும் அவர் வெறுமனே தனக்குள்ளாகவே எல்லாவற்றையும் புதைத்துக் கொள்கிற, யாரிடமும் அவ்வளவு நெருங்கி பழகிவிடாத கூச்ச சுபாவி என்று. அவர் எப்போதும் கடந்த காலத்தின் கசப்புகளோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பவர். நான்கு நாட்களாக அவருக்கு மனசு சரியில்லை ஆனால் பள்ளிக்கூடத்திற்கு  விடுப்பு எடுக்காமல் வந்து கொண்டுதானிருக்கிறார். வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும் மட்டுமே. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையோ இலட்சியமோ எதுவும் அவருக்கில்லை. அவருக்காக மெனக்கெட்டு பெண் பார்க்க யாருமில்லை அவனுடைய மாமாவும் "கிறுக்குப் பய இவனுக்கு பொண்ணு பாத்து வச்சுட்டு எவன் கொலையில நிக்குறது" என்று வெளிப்படையாகவே அவர் அம்மாவிடம் சொல்லிவிட்டு போனவர்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு  அவர் பெண்ணுடைய கல்யாணத்திற்கு  பத்திரிக்கை வைக்கத் தான் திரும்ப வந்தார். அசோக் சாருக்கு அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை.  அவருக்கும் முனுசிபாலிட்டியில் குப்பை அள்ளும் வீரன் பெண்டாட்டிக்கும் தொடர்பு இருப்பதாகவும் பள்ளிக் கூடத்திலும் ஊரிலும் பேசிக் கொண்டார்கள். வீரன் பெண்டாட்டி எப்போதும் அசோக் சார் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவர் அம்மாவிடம் பேசிவிட்டுத்தான் போவாள். அவளுக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு அசோக் சார் தன்னை மறந்து சிரிப்பதும் தனக்குள் இருக்கும் சாதாரண மனிதனை தானே பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வதும் அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது மட்டும்தானோ என்று தோன்றும். வீரன் பெண்டாட்டிக்கு குழந்தை குட்டி எதுவும் இல்லை. தங்கள் சாதியில் பிள்ளைக்குட்டி இல்லாமல் இருப்பவர்கள் மிக குறைவு அதில் தானும் ஒன்றாகிப் போய்விட்டோமே என்ற கவலை அவளுக்கு ஒரு ஓரமாக இருந்து கொண்டுதானிருந்தது . அவளும் அவள் புருஷனும் பெரிய அளவில் எந்த டாக்டரிடமும் இதற்காக போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.அசோக் சார் அம்மா "ஏன்டி  கும்பகோணத்தில பிரைவேட் ஆஸ்பத்ரியிலபோய் நீயும் உன் புருஷனும் ஒரு எட்டு காட்டிட்டு வாயண்டி" என்று சொல்லும் போதெல்லாம் இதுக்கு போய்   டாக்டரா! இதையெல்லாம் வெளியில சொல்லி எப்படி ம்மா கேக்குறது வெட்கமா இருக்கு என்று சொல்லி மடையடித்து விடுவாள். இன்னொரு நாள், அரசாங்க ஆஸ்பத்திரியில் இதுக்கெல்லாம் பாக்குற வசதி இருந்தாக  கூட தேவலை பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கொடுக்க யாருகிட்டம்மா இருக்கு என்பாள்.  அவளுக்கு ஒன்றும் அதிக வயதில்லை முப்பதை தொடும் வயதுதான் ஆனால் அவள் உடலில் அந்த வயதிற்கு மீறிய வாளிப்பு இருக்கும். அசோக் சார் அதையெல்லாம் பார்க்காதவரில்லை. அது அவளுக்கும் தெரியும். வீரன் , அவள் வீட்டிற்கு லேட்டாக வரும் போது எங்கே போன என்று எப்போது கேட்டாலும் "வாத்தியார் வீட்டுக்கு " என்று ஒரே பதில் தான் அவளிடமிருந்து வரும். வீரன் அதற்கு மேல் ஒரு வார்த்தைக் கேட்கமாட்டான். ஒரு நாள் அசோக் சார் , தன் அம்மா அவளிடம் கும்பகோணம் போயி டாக்டர பாருடி என்று சொன்னதை காதில் வாங்கிக் கொண்டிருந்தவர் அடுத்த நாள் அவள் வந்து திண்ணையில் உட்கார்ந்ததும் அவளிடமிருந்து வெத்தலை பொட்டலத்தை வாங்கி பிரித்து வெத்தலைக்கு சுண்ணாம்பை தடவிக் கொண்டே "நீ நாளைக்கு கும்பகோணம் வர்ற வீரன கூட்டிக்கிட்டு" என்னா! பஸ்ல ஏறி வந்துடுங்க . அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் அம்மா இருக்காங்க கூட்டிட்டு போறேன். சரியா என்றார். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கி தின்றது இன்னொரு பக்கம் இனம் புரியாத எதோ ஒரு உணர்வு அவர் மீது . அந்தக் கணம் அப்படியே அவரைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது. கண்ணீரை மறைத்துக் கொண்டுதான் கேட்டாள்.என்னா திடீர்னு இப்படி சொல்றீங்க ? என்று. ஆனால் அசோக் சாருக்கு தெரியும் அவள் அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாள். அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்வாள் என்று. நாளைக்கு சாய்ந்தரம் பஸ் ஸ்டாண்டில நின்னுங்க வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். இதை வீரனிடம் சொல்வது ஒன்றும் பெரிய காரியமில்லை அவன் அவள் வா என்றதும் எப்போதும் மடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும் ஒரு பூனை போல வந்து விடுவான் . அதன் பிறகு டாக்டர் எழுதிக் கொடுத்த பரிசோதனை எல்லாம் முடிந்து ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு அசோக் சார் தான் மீண்டும் டாக்டர் அம்மாவிடம் அதைக் கொடுத்தார்‌. அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வீரனுக்குத் தான் உயிர் அணுக்கள் குறைந்திருந்தது. அதன் பிறகு தான் விஜயகுமார் பிறந்தான். அவனை அவர் இன்று எதோ ஒரு கோவத்தில் வாங்கிக் கொடுத்த பேனாவைக் கூட உன்னால் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியவில்லையா? என்று கேட்டு, வகுப்பில்  எழுதாமல் உட்கார்ந்திருந்ததற்காக மானாங் கன்னியாக போட்டு அடித்து விட்டார்.அடிவாங்கிக் கொண்டு அழுதபடியே அன்று போனவன் தான் அதன் பிறகு அவன் பள்ளிக்கூட பக்கமே வரவில்லை. அவர் வீட்டிற்கும் வரவில்லை. வீரனோ அவன் மனைவியோ ஒரு வார்த்தைக்கூட அசோக் சாரை இது சம்பந்தமாக கேட்கவில்லை. அவர் அடுத்த நாள் வீரனோ அவன் பெண்டாட்டியோ விஜயகுமாரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால் இன்று வரை  பள்ளிக்கூடத்தில் நடந்தது பற்றியோ விஜயகுமார் படிப்பு விஷயமாகவோ அவரை  எதுவும் கேட்கவில்லை.அவனும் மிக பிடிவாதமாக அதன் பிறகு பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். இப்போது வேன் ஓட்டுநருக்கு கிளீனர் பையனாக சேர்த்து விட்டிருப்பதாக வீரன் தான் சொன்னான்.  சொல்லிவிட்டு "வீட்ல இந்த புத்தகத்த உங்ககிட்ட கொடுக்க சொன்னுச்சு என்று சொல்லி  அறிவியல் புத்தகத்தை அவர் கையில் கொடுத்தான். வீட்டிற்கு வந்து அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாக பொரட்டிக் கொண்டே ஏன் அவள் நேரில் விஜயகுமாரைப் பற்றி எதுவும் பேசாமல் இந்தப் புத்தகத்தை கொடுத்துவிட்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் விரல்கள்"அணுக்களும் மூலக்கூறுகளும் " என்ற பாடத்தலைப்பைக் கொண்ட பக்கத்தை பிடித்திருந்தது. அதில் பென்சிலால் விஜயகுமார் எழுதிவைத்திருந்தான் "அசோக் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இனி அவருக்கு நான் எந்த தொந்தரவும் தர மாட்டேன் என்று" . அவருக்கு கண்கள் கலங்கியது. எத்தனையோ முறை அவன் வீட்டிற்கு சென்று கூப்பிட்டும் வராதவனை இந்த முறை கையெடுத்துக் கும்பிட்டாவது அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து சட்டையைப் போட எழுந்து ஓடினார். அவர் அம்மா அவரையே பார்த்தபடி படுத்துக் கொண்டே சொன்னார். விஜயகுமார அழைச்சிட்டு வாடா பாத்து பத்து நாளாவது என்று.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்